திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 4.30 மணிக்கு ரிலீஸ்- கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலின்!

சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது. இதன்படி, திருவாரூரில் கருணாநிதியும், கொளத்தூரில் ஸ்டாலினும் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தமாதம் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முடித்து விட்ட நிலையில், தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கடந்த ஞாயிறன்று திமுக தேர்தல் அறிக்கை வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலா 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் கட்சி 4 தொகுதிகளிலும், மக்கள் தே.மு.தி.க. 3 தொகுதிகளிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப்படை, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. எனவே, இது போக மீதமுள்ள 173 தொகுதிகளில் திமுக போட்டியிட இருக்கிறது. இன்று மாலை 4.30 மணியளவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதில், திருவாரூரில் கருணாநிதியும், சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இவர்கள் தவிர வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சில கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பெயர்களும், புதுமுகங்களும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகு மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட திமுக திட்டமிட்டுள்ளது. வரும் 23-ந் தேதி முதல் தனது சூறாவளி பிரசார சுற்றுப்பயணத்தை திமுக தலைவர் கருணாநிதி தொடங்குகிறார். இதேபோல் மு.க.ஸ்டாலினும், கவிஞர் கனிமொழியும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
Share on Google Plus

About Mindsforest

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment